கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மீண்டும் முழு அளவிலான சோதனை நடத்த, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏ.இ.ஆர்.பி.,) அனுமதி அளித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு இந்த சோதனை நடத்தப்படும்; அதற்கு பின், மின் உற்பத்திக்கான அனுமதி வழங்கப்படும்.தமிழகத்தின், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில், இரண்டு உலைகள் உள்ளன.அதில், முதலாவது அணு உலையிலிருந்து, இன்னும் சில நாட்களில் மின்சாரம் உற்பத்தியாக உள்ளது. அதற்கான இறுதிகட்ட சோதனை முயற்சியில் அணுசக்தி துறை விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில், அணு சக்தி நிலையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட, ஏ.இ.ஆர்.பி.,யின் தலைவர், சதிந்தர் சிங் பஜாஜ் நேற்று இது குறித்து கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில், "ஹைட்டோ - டெஸ்ட்' எனப்படும், முழு அளவிலான சோதனையை மீண்டும் நடத்த, நேற்று முன்தினம் அனுமதி வழங்கியுள்ளோம்.
இதற்கு முன் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், மீண்டும் சோதனை நடத்த அனுமதி வழங்கியுள்ளோம். இதன் மூலம், இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.எல்.,) மற்றும் ரஷ்ய அதிகாரிகள், முதல் அணு உலையில் மீண்டும் இறுதிகட்ட சோதனை நடத்தவும், அதன் மூலம் இறுதிகட்டத்தை அடைந்து மின் உற்பத்தி துவக்கவும் முடியும்.
பல விதங்களாக நடத்தப்படும், முழு அளவிலான சோதனைக்கு, "ஹைட்டோ - டெஸ்ட்' என பெயர். இதில், திடீரென அணு உலையில் ஏற்படும் மின் தடை, அழுத்த குறைபாடு, வெப்ப குறைபாடு போன்ற இடர்பாடுகளின் போது, நிலைமையை எவ்வாறு சமாளிப்பது போன்ற சோதனைகளும் இருக்கும்.அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக அமையுமேயானால், அடுத்த கட்டத்தை அடைய அனுமதி வழங்குவோம். அடுத்த, இரண்டு வாரங்களுக்குள், மின் உற்பத்திக்கான அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment